எங்கே நீயும் எங்கே

அன்பே என் அன்பே எங்கே நீயும் எங்கே 
அன்பே என் அன்பே எங்கே நீயும் எங்கே 

என் உயிர் பறிக்கும் ஒற்றைச் சொல்லை 
உன் இதழால் எழுதிச் சென்றாயடி 
என் விழி பறிக்கும் மின்னல் போல 
என் நெஞ்சில் வெட்டிச் சென்றாயடி 

ஆழியள்ளி என் விழியிரைத்து சென்றவள் நீயடி 
என் ஆசையெல்லாம் மண் புதைத்து சென்றது ஏனடி 
என் உயிர் நிலவின் பயணமோ 
இனி தேய்பிறைதானடி 
என் உயிர் கருகும் வாசமோ 
நீ சூடும் மலர்களில்தானடி 

இருவர் கண்ட கனவெலாம் 
என் கண்ணில் மட்டும் வழியுதடி 
இருவர் வாழ்ந்த நினைவெலாம் 
என் நெஞ்சில் நிழலாய் ஆடுதடி 

உன் நினைவு காயங்களை நெஞ்சில் பூசி 
அதை நித்தம் நானும் ருசிக்கின்றேன் 
உன் நினைவு வீட்டில் குடியேறி 
என் கண்ணீரோடு வசிக்கின்றேன் 

இன்றும் என் மார்பின் தூரம்தான் 
உன் சுவாசச் சூடு 
இனி மரணம் ஒன்றுதான் 
நான் தேடும் வீடு 
இனி கண்ணீர் எழுத கூடுமே 
ஒரு கவிதை ஏடு 

காதல் வழி நீ மாற்றினாய்- என் 
கண்ணில் வலி நீ கூட்டினாய் 
இதயத்தை ஏன் பூட்டினாய்-என் 
இரவெலாம் தீ மூட்டினாய் 

எந்த நேரமும் உன் யோசனை 
என்னைச் சுற்றியே உன் வாசனை 
இன்னும் கட்டச் சொல்லு ஒரு கல்லனை 
என் கண்ணீர் செய்யுதே சாதனை 

இந்த காதல் என்பதே கடும் வேதனை 
இது நீ கற்று தந்த போதனை 
இந்த காதல் என்பதே கடும் வேதனை 
இது நீ கற்று தந்த போதனை 

அன்பே என் அன்பே 
எங்கே நீயும் எங்கே...?

No comments:

Post a Comment